மழை வருது, மழை வருது விளையாட வா!!!!!

பத்து மணிக்கு போட்டி ஆரம்பித்ததும், அறைக்கதவை அடைத்து விட்டதால் வெளியில் மைதானத்தை நோக்கியபடி திண்ணையில் அமர்ந்தேன். என்னைப்போலவே பலரும் திண்ணையில் அமர்ந்திருந்தனர். பெண்கள் பரஸ்பரம் தத்தம் புடவை டிசைன், மற்றும் தாம் அணிந்திருந்த நகைகள் பற்றியும், சிலர் பள்ளியின் சேவை பற்றி தம் விமரிசனங்களையும் பரிமாறி கொண்டனர். ஆண்கள் பெரும்பாலும், தன்னுடைய மொபைல் போனை எடுத்துக்கொண்டு, பொத்தானை குத்திக்கொண்டிருந்தார்கள். எனக்கு அதில் நாட்டம் இல்லாததால், மைதானத்தின் அழகையும், சுற்றி வளர்ந்துள்ள மரங்களையும் நோட்டம் விட்டு, நேரம் செல்ல செல்ல ரசிக்க ஆரம்பித்தேன். மொத்தம் பதினோரு மரங்கள், ஒவ்வொன்றும் ஒரு வகை என்பதை அதன் இலையின் வண்ணமே காட்டிகொடுத்தது. கரும் பச்சையில் தொடங்கி, நீலப்பச்சை, வெளிர் பச்சை என்று எல்லாம் தனித்து விளங்கின. மரத்தின் இடையில் ஊடுருவிப்பார்த்த போது, அதில் ஒளிந்து விளையாடிக்கொண்டிருக்கும், தேன்சிட்டு குருவிகள் தெரிந்தன. 'விருக்கென்று' மேலே வருவதும், அடுத்த கிளையில் மறைவதுமாக, தான் தான் உலகிலேயே மகா 'பிசி' என்று காட்டிகொண்டிருந்தன. உச்சாணிக்கொம்பில் இரண்டு, மூன்று காக்கைகள் கரைந்து கொண்டிருந்தன. சற்று நேரத்தில் வானத்தில் கரு மேகங்கள் சூழ, திடு-திடுவென்று மழை வரத்தொடங்கியது. திண்ணையில் சாரல் அடிக்க தொடங்கியதால் எழுந்து நின்று கொண்டேன். சாரல் வேகத்தில் மைதானம் ஒரு மெல்லிய திரையால் மறைக்கப்பட்டது போல தோன்றியது. தேங்கிய தண்ணீரில் மழைச்சாரல் பட்டு தெறித்து கம்பி மத்தாப்பு போல சிதறிக்கொண்டிருந்தது. மழைக்கும் குழந்தைகளுக்கும் தீராத தொடர்பு ஒன்று உண்டு. அதற்கு ஏற்றாற்போல், ஒரு பொக்கை பல் சிறுவன் வேகமாக மழைக்குள் குதித்து, மைதானத்தின் இந்த பகுதியிலிருந்து எதிர் பகுதிக்கு, பின் அங்கிருந்து இந்த பகுதிக்கும் ஓடினான். நான் அவசர, அவசரமாக என் மனத்தை அவன் தலையில் ஏற்றி வைத்து நானும் மழையில் நனைந்தேன். மழை குளியல் என்னைப்பரவசப்படுத்தியது. பின்னர் மெள்ளத்திரும்பி அறையை கவனித்தேன். இன்னும் மூடியேதான் இருந்தது. இப்போது தேன்சிட்டுக்கள் தெரிகிறதா ? என்று பார்த்தேன். அவை ஒளிந்திருக்கவேண்டும். இப்போது மழை மெல்ல நிற்க துவங்கியது. மீண்டும் மரங்களை நோக்கினேன். இப்போது மழையில் நனைந்த காக்கைகள் தன் இறைக்கைகளை மூக்கால் கிளறிவிட்டு தயார் படுத்திக்கொண்டிருந்தது. மழை முழுவதுமாக விட்டு வெயில் தோன்றியதும், பட்டாம் பூச்சிகள் மைதானத்தின் மேற்பகுதியில் சிறகடித்து பறந்தன. என் மனமும் தான். நேரம் முடிந்து விடவே அறைக்கதவு திறக்கப்பட்டது. என் மகன் பெரிய புன்னகையோடு வெளியில் வந்தான். இனிமையான இரண்டு மணி நேரத்தை தந்த இறைவனுக்கு நன்றி கூறி புறப்பட்டேன்.
Comments
Post a Comment