கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-7 )
ஷஷ்டி அப்த பூர்த்தி சடங்குகளில் முதலில் வருவது, இறையருளை பெறுவதற்கான சில பூஜைகள். முதலில் 'கஜ பூஜை' அதாவது விநாயக பெருமானின் வடிவமாக திகழும் யானைக்கு பூஜை செய்வது. கஜ வடிவம் என்பது பலம், அறிவாற்றல், மதிப்பு மற்றும் மரியாதையின் உருவமாகும். கஜபூஜையின் மூலமாக, விநாயகரை வழிபாட்டு தடைகள் நீங்கப்பெற்று இந்த நான்கு பேறுகளையும் பெறுவதுதான் இதன் அடிப்படை நோக்கம்.
இரண்டாவது 'கோ' பூஜை. அதாவது பசுவை பூஜிப்பது. பசு, மஹாலக்ஷ்மி தாயாரின் அம்சமாக நம் சம்பிரதாயத்தில் வழிபட படுகிறது. 'காமதேனு'வின் அம்சமாகவும் கொள்ளலாம். இந்த வழிபாட்டின் மூலம் நீங்காத செல்வத்தையும், பூர்வ கர்மங்களை களைந்து புண்ணியங்களை பெறலாம்.
மூன்றாவது 'ஹய பூஜை'. ஹயம் என்றால் குதிரை. குதிரை வேகம், அழகு, ஆன்மீக அறிவு முதலியவற்றின் அடையாளம். இந்த பூஜையின் மூலம் இந்த மூன்று பயன்களையும் பெறுவது தான் நோக்கம். அறுபது வயதுக்கு மேலே இதெல்லாம் தேவையா? என்று கேட்காதீர்கள். நிச்சயமாக தேவை.
இந்த முக்கியமான மூன்று பூஜைகளும் செய்தால்தான், முழுமையான தயார் நிலை ஏற்படும் என்பது நியதி. திருக்கடையூரில் இவை மூன்றையும் நியமப்படி செய்ய தகுந்த வசதிகள் அமைந்திருக்கிறது.
மீண்டும் நம் கதைக்கு வருவோமா? சூடான அசோகா அல்வா, பஜ்ஜி, காபி ஆகியவற்றை உள்ளே தள்ளிவிட்டு சிறிது......கூட ஓய்வெடுக்காமல் உடனே கோவிலுக்கு கிளம்பி விட்டோம். வேறு வழியில்லை, நேரம் மாலை ஐந்தரை. நாங்கள் நியமித்த போட்டோகிராபர், ஐந்து மணியிலிருந்து வாசலில் காத்து கிடந்தார். சும்மா சொல்லக்கூடாது, முதல் திருமணமோ, அல்லது அறுபதாம் கல்யாணமோ, போட்டோக்ராபருக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. 'தான் உண்டு, தன் வேலையுண்டு' என்று அங்கும், இங்கும் ஓடுவதும், "தலையை கொஞ்சம் இப்படி தூக்குங்க, வலது கையால பெண்ணை சுற்றி பிடிங்க" என்று தொழில் தர்மத்தை சரியாக கடைபிடித்தார்.
அவசர அவசரமாக கோவிலுக்கு ஓட்டமும், நடையுமாக சென்று உள்ளே நுழையும்போது "பீ, பீ, பீ, டொம்ம, டக்க, டொம்ம, டக்க" என்று நாதஸ்வரம், தவில் முழங்க எங்கள் படையோடு நேராக யானை இருக்கும் இடத்திற்கு சென்றோம். பின்னர், வாத்தியார்சுவாமி மந்திரங்களை ஓதினார். எங்களோடு சேர்ந்து யானையும் , தலையை அசைத்து அசைத்து மந்திரங்களை கேட்டுக்கொண்டிருந்தது. கஜ பூஜை முடிந்தவுடன், யானைக்கு பழம், பாகனுக்கு பணம் கொடுத்தார் வெங்கி.
அடுத்தது கோபூஜை அல்லவா? அதேபோல வாத்தியார் மந்திரங்கள் ஓத, பூஜை நிறைவேறியது. மீண்டும், பசுவுக்கு பழம், ஆசாமிக்கு பணம் வழங்கினார் வெங்கி.
மூன்றாவது 'ஹய பூஜை' குதிரை பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது. அசையாமல் நின்றிருந்தது. அதுதான் நமக்கும் நல்லது. அறுபது வயதில் ஓடுவதெல்லாம் என்னால் முடியாது. பூஜை நல்லபடியாக முடிந்து மூன்று வித ஆசிகளையும் பெற்றுக்கொண்டோம். அடுத்தது என்ன? நாளை பார்க்கலாம்.
(தொடரும்)
Very interesting🤩🙏
ReplyDelete