கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-3)
அறுபதாம் கல்யாணத்துக்கு மூன்றாவது முக்கிய காரணம், என்னவென்றால் ஒரு மனிதன், கிருஹ நிலையை கடந்து ‘வனப்பிரஸ்த்தம்’ என்கிற ஆன்மீக நிலையில் பயணம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவது தான். இது வரை குடும்ப வாழ்க்கையில் உழன்று, குழந்தை, பள்ளி படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பேறு என்று பல பருவங்களை கடந்து, முதல் முறையாக ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு, முழுமையை அடைய முயலவேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த நிகழ்ச்சி. மேலும் சில காரணங்களை அடுத்தடுத்து பார்க்கலாம்.
“அண்ணா, நான் இப்போ திருக்கடையூர்ல இருக்கேன். உங்களுக்கும், அக்காக்கும் அறுபதாம் கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு உங்க பசங்களும் நாங்களும் முடிவு பண்ணிட்டோம். ஜூலை மாசம் ஏழாம் தேதி.”
‘எதே, அப்போ பாகம்-1 ல அம்மா நாள் பார்த்தது, நான் வெட்க பட்டது, எல்லாம் “உவ்வே”தானா?’ எனக்கு கொஞ்சம் மண்டை காய்ந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ள மனமில்லை.
“என்னடா இது திடீர்னு, அறுபது, எழுபது னு உளறர… எப்ப இதெல்லாம் முடிவு பண்ணீங்க?” என்று கேட்டேன்.
“அண்ணா…., இதெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டோம். இப்போ நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க” என்றார் வெங்கி (இது தான் நாங்கள் அவருக்கு வைத்த பெயர்)
“சரி, என்ன விஷயம் சொல்லு”
“இங்க ரெண்டு, மூணு பேக்கேஜ் இருக்கு, நமக்கு எது வேணும்னு முடிவு பண்ணனும். விபரமா, சொல்லறேன்” என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்.
“ஒரு காலம் மட்டும், அதாவது ஷ்ஷ்டிஅப்தபூர்த்தி மட்டும் பண்ணலாம். இல்லேன்னா ரெண்டு காலம் பண்ணலாம், முதல் நாள் சாயங்காலம் உக்கிரகசாந்தி, மறு நாள் காலை ஷ்ஷ்டிபூர்த்தி பண்ணலாம். நம்ம சௌகரியம்தான்” என்றார்.
“ஓஹோ” என்ற என் ஒற்றை பதிலில் அவருக்கு நம்பிக்கை இல்லை.
“சரி, நீங்க போன அக்கா கிட்ட கொடுங்க, நான் கேட்டுக்கறேன்” என்ற அவருடைய அவசரம் எனக்கு புரிந்தது. போனை என் மனைவியிடம் நீட்டி விட்டு, பிறகு அவர்கள் உரையாடலை கவனித்து கொண்டிருந்தேன்.
திருக்கடையூரில் அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வர்ர் எந்த அளவுக்கு புகழ் பெற்று திகழ்கிறார்களோ, அதே அளவிற்கு அங்கு நடைபெறும் திருமணங்களும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன என்பது என் கருத்து. அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு திருமணங்களும் நடத்தி வைக்க படுகின்றன என்பது சிறப்பு. சுமார் இருபதாயிரம் ரூபாயிலிருந்து, சில லட்சங்கள் வரை பல பேக்கேஜ் உள்ளன. அந்த விபரங்களை நாளை பார்க்கலாம்.
(தொடரும்)
Love how the content has gotten tuned to a modern day human's attention span 😂
ReplyDelete