கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (இறுதி பாகம்)
சென்ற பதிவில் மாங்கல்யதாரணம், அதை தொடர்ந்து என்மன வானில் சிறகை விரித்த வண்ண பறவைகளையும் பார்த்தோம். உணர்வு பூர்வமான அந்த நிகழ்வுக்கு பிறகு, நாங்கள் ஆசீர்வாதம் பெறுவதும் (வயதில் மூத்தவர்களிடம்) பின்னர் இளையவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதும், நடைபெற்றது.
நான் சிறுவனாக இருந்த காலங்களில், ஒரு வழக்கம் இருந்தது. எங்கள் வீட்டிற்கு விருந்தினர் யார் வந்தாலும் சரி, அல்லது நாங்கள் உறவினர் வீட்டிற்கோ, வேறுஒரு பெரியவர் வீட்டிற்கு சென்றாலும் சரி, உடனே அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம். மிகவும் நல்ல செயல் அல்லவா!, ஆனால் இதில் ஒரு முக்கியமான பயன் இருக்கிறது. காலில் விழுந்து எழுந்ததும், ஆசீர்வாதத்தோடு, ஐம்பது பைசாவோ, ஒரு ரூபாயோ நிச்சயம் கிடைக்கும். அந்த காலத்தில் இந்த காசை கொண்டு, என்னென்னவோ வாங்கலாம், அல்லது உண்டியலில் போட்டு சேர்த்து வைக்கலாம். இந்த வழக்கம் இப்போது குறைத்திருப்பது நிதர்சனம்.
கொடுக்கும்போதுதான் கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் ஆனந்தம் என்பது என் எண்ணம்.
அந்த நினைவுகளோடு, நாங்கள் ஆசீர்வாதம் பெற்றும், வழங்கியும் மகிழ்ந்தோம். முடிவாக ஆரத்தி எடுக்கப்பட்டு விழா இனிதே முடிந்தது. பின்னர், மீண்டும் அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று, வணங்கி விட்டு, மெல்ல விடுதிக்கு வந்து சேர்ந்தோம். நேரம் ஏறத்தாழ, பன்னிரெண்டை நெருங்கியிருந்தது. ஆடைகளை மாற்றிக்கொள்ள நேரமில்லை. எனவே, நங்கள் இருவரும், அந்த 'கெட்டப்'பிலேயே பந்தியில் உட்கார்ந்துகொண்டோம்.
"கல்யாண சமையல் சாதம், காய் கறிகளும் பிரமாதம்" என்று எஸ்.வி ரெங்காராவ் பாடியது போலவே, சமையல் மிகப்பிரமாதம். மெல்ல, இறுக்கி கட்டியிருந்த வேஷ்டியை லேசாக அவிழ்த்துக்கொண்டு, 1000 கலோரிகளை உள்ளே தள்ளிவிட்டு கைத்தாங்கலாக நடந்து எங்கள் அறைக்கு சென்று சேர்ந்தோம்.
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பிரதி உபசாரம் செய்து, (அவசரத்தில், ஒரு சிலரை மறந்துபோனதும் மனவேதனைக்கு உள்ளாகியது) அவர்களை அனுப்பி வைத்து, உண்ட களைப்பு நீங்க சிறிது ஓய்வு எடுத்து விட்டு, தயார் ஆனோம்.
"அண்ணா, போட்டோக்ராபர், வாத்தியார், எல்லாருக்கும், கணக்கு செட்டில் பண்ணிவிட்டோம். இப்போ, ஹோட்டல் கணக்கும், கேட்டரிங் கணக்கும் தான் பாக்கி. கீழே வாங்க, செட்டில் பண்ணிவிடுவோம்" என்று கடமை தவறாது வெங்கி என்னையும் இழுத்தார். பின்னர் அந்த வேலையையும் முடித்து நாங்கள் தயார் ஆனோம்.
"அப்பா எங்க கிளம்பறீங்க, அறுபதாம் கல்யாணத்துல இன்னொரு ட்விஸ்ட் இருக்கு" என்று என் மகன், மகள், மருமகன் மூன்று பேரும் ஒரேகுரலில் பாடினார்கள்.
"என்ன ட்விஸ்ட், ஒண்ணும் புரியலையே, விஜி... உனக்கு ஏதாவது தெரியுமா?" என்று நான் கேட்க,
"எனக்கென்ன தெரியும்" என்று ஒற்றை வரியில் முடித்து கொண்டாள் என் மனைவி.
எனக்கு தலை சுற்றியது. "அடேய், குழப்பாதீங்க சொல்லி தொலையுங்க" என்று நான் கடுப்பாக, அதற்குமேல் அவர்களுக்கு பொறுமையில்லை.
"நாம, இப்போ சென்னைக்கு போறோம்"
"எதே! சென்னைக்கா?" என்று நான் இன்னும் குழம்ப,
"ஆமாம், அப்புறம் சென்னையிலிருந்து நேரா 'காத்மாண்டு'" என்றார்கள்.
"காத்மண்டுவா? அது நேபாளத்துலல்ல இருக்கு"
"ஆமா, இருக்குல்ல, அங்கதான் போறோம். கல்யாணம் முடிஞ்சா, மணமக்கள் எங்க போவாங்க தெரியாதா? ஹனி மூன்....."
நான் 'ஷாக்' ஆகி நின்றேன்.
கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பார்ட்-2 ) ஹனி மூன் டூ காத்மாண்டு!!
(முடிந்தது)
Nice twist🤩🙏😊
ReplyDelete